பொள்ளாச்சியில் 17 வயது மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
Coimbatore News- மாணவனின் கன்னத்தில் அறைந்தும், கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும், பரிட்சை அட்டையால் அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம், கடந்த 03.09.2024 ஆம் தேதி மாலை தமிழ் வகுப்பில் ஆசிரியர் சுரேஷ் குமார் என்பவர் புறநானூறு செய்யுளை பார்த்து அனைவரையும் நோட்டில் எழுத சொன்னதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவன் ஆசிரியர் சொன்னதை தவறுதலாக புரிந்து கொண்டு, மற்றொரு செய்யுளை தனது நோட்டில் எழுதியுள்ளார்.
இதனை பார்த்த ஆசிரியர் சுரேஷ்குமார் மாணவனை கண்டித்து உள்ளார். மேலும் மாணவன் வேண்டுமென்று இதை செய்வதாக எண்ணி மாணவனின் கன்னத்தில் அறைந்தும், கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும், பரிட்சை அட்டையால் முதுகில் இரண்டு அடி அடித்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவன் வலி தாங்க முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வெளி நோயாளியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக மாணவனின் பெற்றோர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை பேர் மேற்கொண்டு வருகின்றனர். மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.