நாளை சொர்க்கவாசல் திறப்பு: 10 ஆயிரம் லட்டுகள் தயார்
வைகுண்ட ஏகாதசியையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.;
பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் நாளை, நாளை மறுநாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
சொர்க்கவாசலில் கட்டுவதற்கு தேவையான பொருட்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஹோமம், 5.30 மணிக்கு மூலவ, உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.