ரேஷன் அரிசி கடத்தல் : போலீஸாரின் கண்காணிப்பு வளையத்தில் பழைய குற்றவாளிகள்

போலீசார் ரோந்து படை அமைத்து பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-08-13 09:00 GMT

பைல் படம்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை கோவை மாவட்ட போலீஸார்  கண்காணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அந்த அரிசியை புதுப்பித்து கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ரோந்து படை அமைத்து பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றங்களை முழுமையாக தடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் கோவை மண்டல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் பொள்ளாச்சி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு ஏற்கெனவே கைதாகி உள்ள பழைய குற்றவாளிகளை நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கூறியதாவது: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அவர்கள் குற்ற செயலில் ஈடுபடுகிறார்களா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.


Tags:    

Similar News