ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை: ஈஸ்வரசாமி எம்.பி.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஸ்வர சாமி எம்பி கூறினார்.

Update: 2024-06-13 10:04 GMT

ஈஸ்வரசாமி எம்.பி.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு 41 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளின் தரம், மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச திட்டங்களை செயல்படுத்துவது, அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் தரத்தில் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசுப் பள்ளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவரது வழித்தோன்றலாக நமது முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளும் பார்த்து வியக்கும் வண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தான். இதனை ஆறு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. அதேபோல் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சட்டமன்றம் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் மாணவர்கள் கல்வி மட்டும் இன்றி விளையாட்டிலும் சிறந்து விளங்க வாய்ப்பாக இருக்கும். பொள்ளாச்சி பகுதியில் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி மையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீடிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News