யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலை இல்லை, மக்கள் எங்கள் பக்கம் - அமைச்சர் சாமிநாதன் உறுதி
Coimbatore News- யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலை இல்லை, மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று அமைச்சர் சாமிநாதன் பேசினார்.;
Coimbatore News, Coimbatore News Today- திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டி அருகே மாவட்டச் செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வருகின்ற 2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இன்னும் கூடுதல் உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 15ம் தேதி அண்ணா பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்ட நாள் மற்றும் பெரியார் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். கிராமங்கள் தோறும் விழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தேர்தல் பணிகளில் சிறப்பாக களமாற்றிடவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம், அதற்கு உரிமை உள்ளது. ஆனால் மக்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம் எனத் தெரிவித்தார்.