தென்னையில் வேர் வாடல் நோய்க்கு இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தென்னை பயிரில் வேர் வாடல் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.;

Update: 2024-02-28 13:49 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தென்னை பயிரில் வேர் வாடல் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போத பேசிய அவர் கூறியதாவது:-

எந்த விவசாயி பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க நமது முதல்வர் தயாராக உள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு உடனடியாக 560 கோடி ரூபாய் வழங்கியவர் முதலமைச்சர்.

வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்காக 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை வேர் வாடல் நோய் தொடர்பாக விவசாய மண் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மண்ணுயிர் காத்து மண்ணை காப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மண்ணை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு என்று 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் தென்னை வாடல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, வாழை, மா போன்றவற்றிற்கு இதுவரை காப்பீடு திட்டத்தில் கொண்டு வரப்படாமல் இருந்தது. தென்னையை காப்பீடு திட்டத்தில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் தென்னை விவசாயிகள் சந்திக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த காப்பீட்டு திட்டத்தில் தென்னை இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News