பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழப்பு
மின்சார கம்பி உரசியதன் காரணமாக மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலை அடிவார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி மலை அடிவார கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். குறிப்பாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள பருத்தியூர் உமாண்டி மலை சராகப் பகுதியில் களப்பணியாளர்கள் அன்றாட ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பெண் காட்டு யானைகள் பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.
காட்டு யானைகள் மேட்டுப்பகுதியில் இருந்த தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில் மின்சார கம்பி உரசியதன் காரணமாக மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது வனத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. இது குறித்து வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் யானைகளுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள டாக்டர் விஜயராகவன் மருத்துவ குழுவினர்தயார் நிலையில் இருந்த போதும், இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை காலை மருத்துவர்கள் குழுவினர் யானைகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானைகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.