பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.;

Update: 2024-08-14 10:00 GMT

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட ஆஞ்சநேயர் கோவில்.

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. பாலாறு ஆற்றின் மையப்பகுதியில் உள்ள இந்தக் கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு பரவலாக ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலில் இருந்து அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News