போதை தலைக்கேற பனைமரத்து உச்சியில் குடித்த ‘குடிமகன்’ மீட்பு

போதையில் மரத்தில் ஏறி மது குடித்து விட்டு அயர்ந்து தூங்கியது தெரிய வந்தது. உயிர் தப்பிய அவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்;

Update: 2023-05-15 09:57 GMT

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்கோட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள பனைமரத்தில் இருந்து குறட்டை சத்தம் வந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் பனைமரத்தின் மேல் பகுதியை கூர்ந்து கவனித்தபோது அந்த மரத்தின் உச்சியில் அமர்ந்து ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து கோட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பனைமர உச்சியில் இருந்த வாலிபரை எழுப்ப முயன்ற போதிலும் அவரிடம் இருந்து எந்தவித பதில் வரவில்லை. எனவே தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பனை மரத்தின் மீது அமர்ந்திருப்பவரை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பனை மரத்தின் அடியில் கயிற்றுவலை அமைத்து மீட்பு பணிகளில் ஈடுபடலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பனை மரத்தின் உச்சியில் இருந்து அந்த நபரை கீழே இறக்கும்போது நிலைதடுமாறி விழ வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதனை தொடர்ந்து பனை மரத்தின் உச்சியில் இருக்கும் நபரை கிரேன் மூலம் இறக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அதிநவீன கிரேன் ஒன்றை வரவழைத்தனர். இதன் மூலமாக பனைமர உச்சியில் இருந்து ‘குடிமகன்’ பத்திரமாக தரையிறக்கப்பட்டார்.

விசாரணையில் பனைமர உச்சிக்கு சென்று தூங்கியவர், ஆனைமலை செமணாம்பதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கிடைக்கும் பணத்தில் மதுபானம் அருந்தி வந்து உள்ளார். நேற்று லட்சுமணன் அளவுக்கு மீறிய போதையில் பனைமர உச்சிக்கு சென்றுள்ளார். மரத்தில் அமர்ந்தபடியும் மது குடித்து விட்டு அயர்ந்து தூங்கியது தெரியவந்தது. உயிர் தப்பிய அவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News