தென்னை நார் தொழிற்சாலை கழிவு நீரால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்
பலமுறை புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சார் ஆட்சியர் கேத் தீரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் சில விவசாயிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை முறைகேடாக திருடுவதாகவும், காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும் அங்கலக்குறிச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஆழியார் அணையில் இருந்து வரும் தண்ணீரைக் கொண்டு பீய்ச்சி அடித்து தென்னை நாரை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் தண்ணீரின் தன்மை மாறி மாசடைந்து வருகிறது.இதனால் கால்நடைகளுக்கு கூட இந்த தண்ணீரை பயன்படுத்த முடிவதில்லை எனவும், தென்னை மரங்களும் பாதிப்படைந்துள்ளது எனவும் கூறினர். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.