மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்து விட்டார் : எடப்பாடி பழனிசாமி

வரியை உயர்த்தி மக்கள் மேல் சுமையை திமுக அரசு போடுகிறது. திமுக என்றாலே கார்ப்பரேட் கம்பெனி;

Update: 2024-04-10 15:15 GMT

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, அதிமுக இரண்டு, மூன்றாக போய் விட்டது என ஸ்டாலின் சொல்கிறார். இங்கு பொள்ளாச்சியில் வந்து பாருங்கள், ஒன்றாக உள்ளது. ஸ்டாலின் அதிமுகவை உடைக்க எவ்வளவோ அவதாரம் எடுத்து பார்த்தார். அது எல்லாம் தொண்டர்களால் தவிடு பொடி ஆக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெ இருவரும் இறைவன் கொடுத்த கொடை. 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக.

மக்கள் மனதில் வாழும் தலைவர்கள் நம் தலைவர்கள். எம்.ஜி.ஆர், ஜெ மக்கள் உள்ளதில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இனி எத்தனை புதிய தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு அதிமுகவில் அனைவரும் சமம்.

மக்களின் குழப்பத்தில் சிலர் ஆதாயம் தேட முயல்கிறார்கள். அது எடுபடாது. ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என பாஜக தலைவர் ஒருவர் சொல்கிறார். அது கேரளா, தமிழ்நாடு மாநில அரசுகள் கலந்து பேசி முடிக்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் போது உயர் அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதான் பின் கொரோனா வந்தது. பின்னர் ஆட்சி மாறியது. இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி தான். அப்படி இருக்கையில் பாஜக ஆட்சி அமைந்தால் எப்படி அவர்கள் அத்திட்டத்தை முடித்து கொடுப்பார்கள்? எனவே மத்திய அரசால் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியாது. அது மாநில அரசுகள் எடுக்கும் முடிவு.

மேகதாது விவகாரத்தில் ஏன் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவில்லை? அணை கட்டியே தீருவேன் என்கிறார் கர்நாடக அமைச்சர் சிவக்குமார். இதற்கு மத்திய அரசு தலையிட்டு கட்ட முடியாது என கூறவில்லையே? அப்படி இருக்கையில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை எப்படி நிறைவேற்றுவார்கள்?

ஆட்சியில் என்னென்ன திட்டம் கொண்டு வந்தோம் என ஸ்டாலினால் பேச முடியுமா? ஆனால் என்னைப் பற்றி இழிவாக பேசுவதை மட்டுமே பிரசாரதில் கொண்டு உள்ளார். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு பேசுங்கள். இல்லை எனில் எங்கள் தொண்டர்கள் பேசுவார்கள், அவர்கள் பேசினால் தாங்க மாட்டீர்கள்.

வரியை உயர்த்தி மக்கள் மேல் சுமையை திமுக அரசு போடுகிறது. திமுக என்றாலே கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதியை உள்ளே கொண்டு வர பார்க்கிறார்கள். செல்ப் எடுக்கவில்லை. போகும் இடத்தில் எல்லாம் ஒற்றை செங்கலை எடுத்து கொள்கிறார். ஒற்றை செங்கலை இங்கு தூக்கி காட்டி பயன் இல்லை. 38 எம்.பி.க்கள் வென்றார்கள், அவர்கள் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு அழுத்தம் தந்து இருக்க வேண்டும். அதை விட்டு ஒற்றை செங்கலை ஊர் ஊராக கொண்டு செல்வது, உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் காட்டில் சென்று சிங்கம் மேய்ப்பானாம் அப்படி தான் இருக்கிறது.

மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்து விட்டார். 2ஜியில் இமாலய ஊழல் செய்த கட்சி திமுக. ஒரு வருடத்திற்கு 3000 கோடி கொள்ளை அடிக்கும் திட்டத்தில் இருந்தவர், தற்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். கள்ள மது விற்பனை மூலமும் பல ஆயிரம் கோடி வருமானம் பார்த்தார். அவற்றை சரியான நேரத்தில் திமுக தலைமைக்கு கப்பம் கட்டினார். திமுகவில் 4 முதல்வர்கள் இருக்கின்றனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்.. இப்படி 4 அதிகார மையங்கள் திமுகவில் உள்ளன  எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News