பொள்ளாச்சி சாலை விரிவாக்க பணி: நீதிமன்றங்கள் இடமாற்றம்
பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிக்காக பழைய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நீதிமன்றங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 ச மீ, அரசு நிலம் 6,836 ச. மீ நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் உள்ளது. நீதித்துறை நடுவர் மன்றம் (ஜே.எம். 1), சார்பு நீதிமன்றம், தபால் நிலைய பகுதிகளில் நிலம் கையகப்படுத்த வேண்டிய இருந்ததால் பணிகள் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கோர்ட்டுக்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி சார்புநீதிமன்றம் பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கும், நீதித்துறை நடுவர் மன்றம் சார்பு நீதிமன்ற கட்டிடத்திற்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வக்கீல்கள் சங்க கட்டிடத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடங்களில் நேற்று முதல் நீதிமன்ற பணிகள் தொடங்கியது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் காரணமாக சாலை அகலப்படுத்தும் பணிகள் தாமதமாகி வந்தது. தற்போது நீதிமன்ற கட்டிடங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்து முழுமையாக பொருட்களை காலி செய்த பிறகு அந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும். தீயணைப்பு நிலையத்தில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வரை 50 மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இதேபோன்று பாலக்காடு ரோட்டில் துணை நீதிமன்ற பகுதியில் 60 மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
தபால் நிலைய பகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே காந்தி சிலை, ராஜாமில் ரோடு சந்திப்பு பகுதிகளில் நீதிமன்ற கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளனர்