பொள்ளாச்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்; நடவடிக்கை கோரி கவுன்சிலர்கள் போராட்டம்
Coimbatore News- பொள்ளாச்சியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் கூறிய கவுன்சிலர்கள், இவ்விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்வோம் எனத் தெரிவித்தனர்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி கோட்டூர். இந்த பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகள் தினசரி ஏழு டன் பேரூராட்சி மூலம் எடுக்கப்படுகிறது. இந்த குப்பைகளை கொட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு 3.8 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள தனிநபர் அரசுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் இடம் அளவீடு செய்யப்பட்டது. ஆனால் சர்வேயர் ஒரு தலைபட்சமாக தனிநபருக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், இடத்தை சுற்றி பதிக்கப்பட்டு இருந்த அளவு கற்களை அகற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக ஆனைமலை தாசில்தார் அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு உறுப்பினர்கள் உடன் தாசில்தார் ரேணுகாதேவி பேச்சுவார்த்தை நடத்தி, நேரடியாக ஆய்வு செய்வதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இவ்விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது பதவியை ராஜினாமா செய்வோம் எனவும், இது குறித்து தமிழக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.