தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டையொட்டி பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி

தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-01-18 10:18 GMT

பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டிகளின் போது வாடிவாசல்களில் இருந்து ஜல்லிக்கட்டு  மைதானங்களுக்கு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். காளையர்களின் பிடியில் அடங்காமல் திமிறிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு தவிர ராமநாதபுரம், கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில்  ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ரேக்ளா பந்தயம் மிகப்பிரபலமாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரேக்ளா போட்டிகள் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சுமார் 300 காளைகள் இப்போட்டிகளில் பங்கேற்றன. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேராளவை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக  நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு முதலாவதாக வண்டி ஓட்டினார். இந்த போட்டிகளை தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் கலந்து கொண்ட காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்த்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து போட்டிகளை கண்டு மகிழ்ச்சி அடைத்தனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 30 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க நாணயங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News