பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
Coimbatore News- ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்;
Coimbatore News, Coimbatore News Today- பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி, அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 178 மையங்களில் 1715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் 71.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொண்டாமுத்தூர் தொகுதியில் 67.97 சதவீத வாக்குகளும், கிணத்துக்கடவு தொகுதியில் 68.17 சதவீத வாக்குகளும், வால்பாறை தொகுதியில் 70.58 சதவீத வாக்குகளும், உடுமலை தொகுதியில் 72.36 சதவீத வாக்குகளும், மடத்துக்குளம் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகளும், பொள்ளாச்சி தொகுதியில் 74.28 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பொள்ளாச்சி தொகுதியில் 74.28 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 67.97 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக, பொள்ளாச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வருகின்ற ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.