யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்த வனத்துறை
Coimbatore News- யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்தது வனத்துறை. 3 சிறப்பு குழுக்கள் மூலம், அந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் காப்புக்காடு எல்லைக்கு வெளியே உள்ள கேஸ் குடோன் அருகே சுமார் 3 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி ஒன்று கூட்டத்தை பிரிந்து தனியாக சுற்றி வந்துள்ளது. இதனைப் பார்த்த கிராம மக்கள் குட்டி யானை தனியாக சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் விரைந்து வந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர் குட்டி யானையை பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு யானைகள் கண்காணிப்பு குழு குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க உதவுவதற்காக வரவழைக்கப்பட்டது. இதனிடையே கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் யானைக் குட்டிக்கு இளநீர், குளுக்கோஸ் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. பின்னர் குட்டி யானையை பரிசோதித்த போது, நல்ல உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குட்டி யானை பிரிந்த வந்த யானைக் கூட்டத்தின் இருப்பிடத்தை கண்டறிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 4 பெண் யானைகள், ஒரு இளவயது ஆண் யானை கொண்ட ஒரு யானைக் கூட்டம் புளியம்தோப்பு பகுதியில் இருப்பதும், அந்த யானைக் கூட்டத்தில் இருந்து குட்டி யானை பிரிந்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து குட்டி காட்டு யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க குளிக்க வைத்து, குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று காட்டு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். போராடி குட்டி யானையை அந்த யானைக் கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர். அந்த யானைக் கூட்டம் குட்டி யானையை சேர்த்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.