கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா இளைஞர் கைது
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகர் மைதானம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜகா பரிதா (29) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.