மக்கள் தொடர்பு முகாமில் ரூ 1.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கோவை அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்
கோவை மாவட்டம், செஞ்சேரிபுதூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ரூ.1.63 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கோவை செஞ்சேரிபுதூரில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் சூலூர் எம்எல்ஏ வி.பி. கந்தசாமி. ஆகியோர் கலந்து கொண்டு 93 பயனாளிகள் 1.63 கோடி. மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.
ஆட்சியர் கிராந்திகுமார் பேசுகையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் பட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும். மேலும் கனிம வளங்கள் கடத்தல் குறித்து விசாரணை நடத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் உரிமை தொகைக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு பணி, பயோமெட்ரிக் இயந்திரங்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது என்றார் ஆட்சியர்.
முகாமில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தாசில்தார் நித்திலவல்லி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.