கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல்
கோவை மாவட்ட நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் கந்தேகவுண்டன் சோதனை சாவடி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.;
கோவையில் மாவட்ட நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் கந்தேகவுண்டன் சோதனை சாவடி ஆகிய இரு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 5 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சேரன் மாநகர் பகுதியில் மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை இயக்குனர் அலுவலகத்தில் கணக்கில் வராத 3 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாலக்காடு சாலையில் உள்ள கந்தே கவுண்டன் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் புர்ஹானுதீன் மற்றும் வட்டார போக்குவரத்து ஊழியர்கள் ஈஸ்வரன், தங்கராஜ் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு சம்பவங்களிலும் சுமார் 5 லட்ச ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து , சம்பவ இடத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் கையூட்டு பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது