கோவையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை ; போலீசார் விசாரணை

உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர்.

Update: 2024-08-02 11:30 GMT

உதயகுமார்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர் வழக்கறிஞரக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பியுள்ளார்.தனக்கு சொந்தமான காரில் அவர் கிளம்பிய நிலையில், அவருடன் மேலும் சிலரும் அந்த காரில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பொள்ளாச்சி செல்லும் சாலையில் மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் பயணித்துள்ளது.

சிறிது தூரத்தில் காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரை படுகொலை செய்த நபர்கள், உதயகுமாரின் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சூலூர் போலீஸார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதயகுமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News