கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அச்சான்றிதழ் இல்லையெனில் பயணிகளுக்கு சோதனைச் சாவடியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 13 எல்லைகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளிடம் சான்றிதழ்கள் சோதனை செய்த பின்னரே, தமிழ்நாட்டிற்குள் வர அனுமதிக்கின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இன்றி வருவோரை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். அவசர தேவை என்றால் மட்டும், சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை செய்த பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வாளையாறு வந்த 50 வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுவரை கேரளாவில் இருந்து கோவை வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.