கிணத்துக்கடவு பகுதியில் விதிமீறும் கல் குவாரிகளை மூடக்கோரி போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அனைத்து அணைகளும் இன்னும் தூர்வாரப்பட வில்லை.

Update: 2023-08-12 11:15 GMT

கிணத்துக்கடவில் விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்  முத்தூரில் நடைபெற்றது.

கிணத்துக்கடவு பகுதியில் விதிமீறும் கல் குவாரிகளை மூடக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு பகுதியில் விதிமீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிராமப்புற சாலைகளில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளை தடுப்பது போன்றவை குறித்து விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெம்பர்.10 முத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் நெம்பர்.10 முத்தூர், சொக்கனூர், வடபுதூர், கல்லாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், விவசாய சங்க நிர்வாகிகள் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அனைத்து அணைகளும் இன்னும் தூர்வாரப்பட வில்லை. அணைகளில் 30 சதவீதம் வண்டல் மண் உள்ளது. அந்த வண்டல் மண்ணை எடுத்தாலே, தமிழகத்தின் 5 ஆண்டு கால மணல் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

கல் குவாரிகள் கல் குவாரிகள் சட்டப்படி இயங்க வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் குவாரிகள் இயங்க வேண்டும். அதன் பின்னர் குவாரிக்குள் வேலை நடக்கக்கூடாது. அங்கிருந்து கனிம வளங்கள் வெளியே ஏற்றி செல்லக்கூடாது. ஊராட்சி சாலைகளில் செல்லும் லாரிகளின் கனிமவள மொத்த எடை 10 டன் தான் இருக்க வேண்டும். ஊராட்சி சாலைகளில் 6 சக்கர லாரிக்கு மேல் செல்லக்கூடாது.

அரசு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், அதற்கு மேல் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. தற்போது விதிமீறும் குவாரிகளை மூடுவதற்கு அனைவரும் சட்டரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

விதியை மீறி வெடி வைத்தால், அளவுக்கு அதிகமாக லாரிகள் கல்லோடு ஏற்றி சென்றால் மாலை 5 மணிக்கு மேலும் கல் குவாரிகள் இயங்கினால் உடனடியாக சென்னை சுரங்க இயக்குனர், மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் குவாரிகள் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.






Tags:    

Similar News