கோவையில் இந்திய வரைபட வடிவில் நின்று கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

கோவையில் இந்திய வரைபட வடிவில் நின்று கல்லூரி மாணவர்கள் நூறு சதவீத வாக்குப்பதிவிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-03-22 10:05 GMT

கோவையில் இந்திய வரைபட வடிவில் நின்ற கல்லூரி மாணவர்கள்.

18 வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து, வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் அரசு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் பொதுமக்கள் இடையே கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் என்ற தனியார் கலை அறிவியல் கல்லூரியில், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முதல் வாக்காளர்களாகிய கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார். அவர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டனர். மேலும் இந்நிகழ்வில் 100% வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வண்ணம் மாணவர்கள் இணைந்து இந்திய வரைபட வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News