கோவையில் பைக் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

கோவையில் பைக் டாக்சி டிரைவரை வாடகைக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-28 11:45 GMT

பைல் படம்.

கோவை சுந்தராபுரம் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (34). இவர் பைக் டாக்சி ஓட்டி வருகிறார். இவர் நேற்று சுந்தராபுரம் கணேசபுரத்திற்கு சவாரி சென்றார். பின்னர் அங்கு சரண் (19) என்ற வாலிபரை இறக்கி விட்டு, வாடகை பணம் கேட்டார். அதற்கு சரண், தனது நண்பர்கள் வந்து கொண்டு உள்ளனர். அவர்கள் வந்தவுடன் பணம் தருகிறேன் என தெரிவித்து உள்ளார். ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. பணமும் கொடுக்கவில்லை.

இதனை அடுத்து ரஞ்சித், சுந்தராபுரம் காந்தி நகரில் உள்ள சரண் வீட்டுக்கு சென்று பணம் தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தார். மேலும் அங்கு வந்த சரணின் நண்பர்கள் சிலரும் ரஞ்சித்தை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலின் போது அவரது பணம், வாட்ச் ஆகியவை காணாமல் போனது.

இதுகுறித்து ரஞ்சித் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரஞ்சித்தை தாக்கியது கூலி தொழிலாளிகள் சரண், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ் (21), போத்தனூரை சேர்ந்த ஸ்டாலின்(28) மற்றும் முல்லை நகரை சேர்ந்த பவித்ரன் (21) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.  பைக் டாக்சி டிரைவரை வாடகைக்கு அழைத்து சென்று தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News