தடாகத்தில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராகுல் என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-08-29 06:38 GMT

கைது செய்யப்பட்ட ராகுல்

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அல்லாத நபர்களைப் பிடித்து விசாரித்ததில் கஞ்சா மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் தனிப்படையினர் கணுவாய் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மாணவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் விவரங்களையும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற கல்லூரி மாணவர்களுக்கிடையான கஞ்சா போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட காவல் துறை செயல்படும் என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News