கோவையில் வெளி மாநில தொழிலாளர்களுக் கான மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது;
கோவை மண்டல அளவிலானா வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை மற்றும் அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுவினை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைத்துள்ளது.
கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, குன்னூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் கோவை மண்டல அளவிலான இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கூடுதல் இயக்குனர்கள் சிறப்பு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.