கோவையில் திருநங்கையை கொலை செய்த இளைஞர் கைது

தவறாக கொலை செய்திருப்பதை அறிந்து மாசிலாமணியை கொலை செய்ய மீண்டும் மருதமலை வந்த தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-03 00:58 GMT

தினேஷ்

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). திருநங்கையான இவர், ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.

கடந்த 29 ம் தேதி அங்கு தங்கியிருந்த தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டில் இருந்து அவரது நண்பர் மணிகண்டன் உடன் வெளியே வந்த போது ரோட்டில் நின்றுகொண்டிருந்த சென்னையை சேர்ந்த தினேஷ் (எ) தினேஷ் கந்தசாமி என்பவருடன் வண்டியை தள்ளி நிறுத்தச் சொல்லும்போது ஒரு சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாசிலாமணி மீது கோபத்தில் இருந்த தினேஷ், அவரை கொல்லும் நோக்கில் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்துள்ளார். மாசிலாமணியை கொல்வதற்காக இரண்டு கத்திகளை வாங்கிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் திரும்ப வந்து அந்த கத்தியை மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் அடுத்த நாள் மாசிலாமணியை நோட்டமிட சென்ற தினேஷை, அவரது பெற்றோர் முன்பு திட்டியதால் கோபமடைந்த அவர் பழிவாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 29 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு மாசிலாமணி வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு படுத்திருந்த திருநங்கை தனலட்சுமியை மாசிலாமணி என நினைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்ற தினேஷ் மொட்டை அடித்துக் கொண்டு மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. பின்னர் தவறாக கொலை செய்திருப்பதை அறிந்து மாசிலாமணியை கொலை செய்ய மீண்டும் மருதமலை வந்த தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News