’திமுக அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறது’ - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு
Coimbatore News- திமுக அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதாக, கோவையில் ஜிகே வாசன் குற்றம் சாட்டினார்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை இராமநாதபுரம் பகுதியில் தமாகா இளைஞர் அணியின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், மருத்துவ படிப்பிற்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இலவச வினாவிடை புத்தகங்களை வழங்கினார். மேலும் இளைஞர் அணியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் கூறியதாவது,
கோவையில் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது கோவை மாவட்டத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மருத்துவ மாணவர்களின் வரப்பிரசாதமாக இருந்துள்ளது.
திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து என்று துவங்கி அத்தேர்வை ரத்து செய்வதை போல மக்களை குழப்பி, பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது. தயவு செய்து மாணவர்களிடம் அரசியலை புகுத்த வேண்டாம். தேர்தலுக்காக இதுபோன்ற அரசியலை செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பி அலைகழித்து வருகிறது. இன்று தமிழக முழுவதும் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. டாஸ்மார்க் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் தமிழகத்தில் பல்வேறு போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. கிளாம்பாக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் தேர்தல் நெருங்கி வருவதை கணக்கில் கொண்டு, அவசரகதியில் பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள். அதனால் தற்போது மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.