கோவையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: வழக்கம் போல இயங்கும் பேருந்துகள்

அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன.

Update: 2024-01-09 01:45 GMT

பாதுகாப்புப் பணியில் போலீசார்.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையிலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன. அந்த தொழிற்சங்கங்களை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து பணிமனைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உக்கடம், சாய்பாபாகாலணி உள்ளிட்ட பணிமணிகளில் இருந்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் கிளையில் 70 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று 67 பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதே போல இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை 4 மணி முதல் நகர பேருந்துகள் இயக்கப்படுவதாலும் போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் கருமத்தம்பட்டி கிளையில் உள்ள 43 பேருந்துகளும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர் நடத்துநர்களும் இயக்கி வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தார்.

இந்த நிலையில் அதிகாலை முதல் போக்குவரத்து பணிமனைகள் முன்பாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் சூலூர் பணிமனையில் இருந்தும்,அன்னூர் பணி மனையில் இருந்தும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News