கோவையில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட பயிற்சிகள் தீவிரம்
Coimbatore News- கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
Coimbatore News, Coimbatore News Today- 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது முடிந்ததை தொடர்ந்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இறுதி கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர்க்கு எந்த ஒரு கட்சியினரும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் தடுப்புகள் அமைப்பதற்கு பேரிகேட் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும் 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும் 127 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதி நாள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார், மற்றும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.