நாமக்கல் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையனின் வலது காலை அகற்ற முடிவு

முட்டிக்கு கீழ் உள்ள பகுதிகளில் ரத்த ஓட்டமானது தடையாகி இருப்பதால் காலை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-09-30 15:15 GMT

அசார் அலி 

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரி மூலம் தப்பிச் செல்ல முயன்ற ஹரியானாவை சேர்ந்த ஏழு பேரை நாமக்கல் பகுதியில் தமிழக காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் அசார் அலி என்பவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசார் அலியிடம் நேற்று குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் விசாரணை சாட்சியங்களை பதிவு செய்து சென்றார்.

இந்நிலையில் அசார் அலிக்கு வலது காலில் துப்பாக்கி சூட்டினால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் முட்டிக்கு கீழ் உள்ள பகுதிகளில் ரத்த ஓட்டமானது தடையாகி இருப்பதாகவும், இதனை விட்டு விட்டால் உடலில் இதர பிரச்சனைகள் ஏற்படும் எனவும் எனவே வலது காலில் முட்டிக்கு கீழ் உள்ள பகுதியை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டு சிகிச்சை ஆனது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News