கோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!

1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப் பட்டுள்ளது;

Update: 2023-08-17 12:00 GMT

பைல் படம்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவை, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது.

திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் குறிச்சிகுளம் உட்பட கோவையின் ஏழு பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரி முகப்பு மேம்படுத்தப்பட்டு, தமிழர் கலாசாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் சிற்பங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளன.தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை விரைவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளுவர் பற்றிய சிறப்புகளை சொன்னோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குறள், இரண்டு குறள் இல்லை மொத்தம் 1330 குறட்பாக்களை வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்களோடு உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார். உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை முறையில் சரியான வழியில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தனது 133 அதிகாரங்கள் மூலம் பல வருடங்களுக்கு முன்பே தெளிவாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். 

சென்னையில் உள்ள ஒரு முக்கியமான பகுதி “வள்ளுவர் கோட்டம்”. இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் திருக்குற ளின் அனைத்து குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன . இன்று வரை தமிழக அரசு அதனை சிறப்பாக பாதுகாத்து வருகிறது. தமிழக மற்றும் இந்திய தேசத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திரு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது 133 அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133 அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News