விஜயகாந்தின் வாழ்வியல் முறை குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் சினேகன்
விஜயகாந்த் வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என கவிஞர் சினேகன் கூறினார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தலை முடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக விக்கோமேனியா ஸ்டோர் திறக்கப்பட்டது. இதனை கவிஞரும், திரைப்பட நடிகருமான சினேகன் மற்றும் கன்னிகா ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து ஆலம் விழுதுகள் தலைவர் மீனா ஜெயக்குமார் மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், தான் ஏறத்தாழ 3000 பாடல்களை கடந்து விட்டேன். 2 படங்களுக்கு வசனம் எழுதி வருகிறேன். சில படங்களில் நடித்தும் வருகிறேன். இலக்கியம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த ஆண்டில் ஒரு பெரிய நாவலை தயாரித்து வருகிறேன். 3 கவிதை தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள் இந்த ஆண்டு வரவுள்ளது.
முன்பெல்லாம் கதைகளில் பல கிளைகள் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல விஷயங்களை கூற முடியும். இன்றைக்கு ஒரு நிகழ்வே கதையாக மாறிவிடுவதால் அழுத்தமான பாடல்களை திரைத்துறையில் வைக்க முடியவில்லை என்ற கவலை உள்ளது. ஆரோக்கியமான பாடல்கள் குறைவு தான். அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கவிஞர்கள் பாடகர்கள் இயக்குனர்கள் எல்லாம் வெவ்வேறு இடத்திலிருந்து செல்போன் மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்வதனை ஒரு ஆரோக்கியமான விஷயமாக நான் கருதுவதில்லை. அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி தகவல்களை பரிமாறிக் கொண்டு பணி செய்யும் பொழுது தான் ஆரோக்கியமான பாடல்கள் கிடைக்க பெறும்.
பாடல்கள் தான் நம் கலாச்சாரத்தின் அடிநாதம். அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மிடம் பாடல்கள் உள்ளது. ஒரு ஃபேசனுக்காக வேண்டுமென்றால் பாடல்கள் இல்லாத படம் எடுக்கலாமே தவிர, அது நிலைக்காது. கடந்த ஐந்து வருடங்களாக சப்தத்திற்குள் சினிமா மாட்டிக் கொண்டுள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டியது ரசிகர்களாகிய நம்முடைய பணி. கேப்டன் விஜயகாந்த் மனித நேயமிக்க மனிதர். கட்சியையும் தொண்டர்களையும் மீறி அனைவருக்கும் அவர் மேல் ஒரு பிடித்தம் இருந்தது. நானும் அவருடன் இணைந்து பணி புரிந்துள்ளேன்.
விஜயகாந்த் சினிமாவின் இக்கட்டான நிலையை மீட்டெடுத்ததும் சரி கண்ணுக்குத் தெரியாமல் செய்த உதவிகளும் சரி இது போன்ற அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் அவரது பெயரும் அடுத்த தலைமுறையினரை சேர வேண்டும் என்றால், நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும். அவரது வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.