கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகம் திறப்பு
சுற்றுலாத் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டிலும் 10 முதல் 15 இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது;
கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் திறந்து வைத்து பார்வையிட்டர்.
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம், தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தினை சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மாமதிவேந்தன் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அறைகள், உணவகங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, முதற் கட்டமாக சென்னை தீவுத் திடல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, கண்ணியாகுமரி, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுபிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த ஹோட்டல்களின் வருமானம் அதிகரிக்கும், மேலும், புதுப்புது வகை உணவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக வருவாய் ஈட்ட வாய்ப்புஉள்ளது.
சுற்றுலாத் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டிலும் 10 முதல் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த சுற்றுலா தளங்களில் வெவ்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பிரப்பன்வலசை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கொலவாய் ஏரி, பூண்டி ஏரிகள், குண்டாறு அணை, சிற்றாறு அணை, உள்ளிட்டவை புதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், பூம்புகார் புதுப்பிக்கப்பட உள்ளது. ஒகேனக்கல் சிறந்த சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு ஹோட்டலில், பால் சீலிங், ஏசி வசதி, மின் விளக்குகள், தரை மற்றும் சுவர் ஓடுகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.32லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வந்தது. தற்போது, முதல் முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. இவ்விழா நடைபெறும் இடம் ஆய்வு செய்யப்படவுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்த கொண்டு வரப்பட்டுள்ளன என சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், முன்னாள் சட்டமன்ற உ றுப்பினர் நா.கார்த்திக், மத்திய மண்டலக் குழு தலைவர் மீனாலோகு, உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, தமிழ்நாடு ஹோட்டல் மண்டல மேலாளர் வெங்கடேசன், மேலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.