கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள்: அமைச்சர் ரகுபதி கருத்து
இந்தியாவில் தமிழக சிறைத்துறை முதலாவது இடத்தை பெற்று உள்ளது.;
கோவையில் கைதிகள் நடத்தும் 2-வது பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் நிலையம் நடத்தப்படுகிறது. இங்கு கைதிகளே பணியாற்றி வருகின்றனர்.
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பெட்ரோல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் ஒரு காருக்கு அமைச்சர் ரகுபதி பெட்ரோல் நிரப்பி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது
இந்தியாவில் தமிழக சிறைத்துறை முதலாவது இடத்தை பெற்று உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைத்துறையை மேம்படுத்த கொடுத்த ஆலோசனைகள்தான் காரணம். இங்கு சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு உணவு பட்டியல் மாற்றப்பட்டு உள்ளது.
சிறை கைதிகள் தண்டனை காலத்தில் கூட மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதித்து அவர்களது குடும்பத்திற்கு அனுப்பும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்கள் தரமாக தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தண்டனையை அனுபவிக்கும் இடமாக இல்லாமல் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், கோவை சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு, புதுச்சேரி மேலாண்மை இயக்குனர் வி.சி.அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.