அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும்;

Update: 2022-12-17 09:30 GMT

பைல் படம்

கோவை மாவட்டம், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே யைகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசின் தொழில் துறை  வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் ஒரு தொழிற்பூங்காவை நிறுவ அரசு முடிவுஎடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாகத் தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், 3ஆயிரத்து 862 ஏக்கர் நிலத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை முக்கியம்: தொழிற் பூங்காவுக்காக, அன்னூர், மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என மக்களவை உறுப்பினர் ஆ. ராசா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும். நிலங்களை விடுத்து,  தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமாக உள்ள தரிக நிலங்கள் மட்டுமே தொழிற்பூங்கா  அமைக்க கையகப்படுத்தப்படும். எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் முன்வந்து கொடுக்க வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு அளிக்கப்படும்.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படும். தொழிற்பூங்காவில் காற்று மற்றும் நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே செயல்படும். டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான  தரிசு நிலங்களில் மட்டுமே  தொழில் பூங்கா அமைக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிட்கோ நிறுவனத்தின் நோக்கங்கள்... பெரும் முதலீட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பெருந்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு டிட்கோ வழிவகை செய்து வருகிறது. சென்னை-பெங்களூரு தொழில் பெருந்தடம், சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருந்தடம், கொச்சி-கோயம்புத்தூர்-பெங்களூரு தொழில் பெருந்தடம் மற்றும் பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாக டிட்கோ செயல்படுகிறது.

இரசாயனப் பொருட்கள், உரங்கள், மருந்து பொருட்கள், ஜவுளி, இரும்பு மற்றும் எஃகு, வாகன உதிரி பாகங்கள், உணவு மற்றும் வேளாண்மை, கொய் மலர் வளர்ப்பு, பொறியியல், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு போன்ற உற்பத்தித் துறை சார்ந்த மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உயிரி தொழில் நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வேளாண் ஏற்றுமதி மண்டலங்கள் போன்ற உட்கட்டமைப்பு துறை சார்ந்த பல கூட்டாண்மை நிறுவனங்களில் டிட்கோ முதலீடு செய்துள்ளது.

டிட்கோ தமிழ்நாட்டில் பெரிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உதவுகிறது.டிட்கோ இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். மேலும், பெரும் முதலீடு மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை அளிக்ககூடிய பெரிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மாநிலத்தில் நிறுவ டிட்கோ வழிவகை செய்கிறது.

Tags:    

Similar News