கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை: போலீசார் விசாரணை

உறங்கிக் கொண்டு இருந்த ரிங்கு குமாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றார்.

Update: 2024-04-07 06:30 GMT

காட்டூர் காவல் நிலையம்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 5 தொழிலாளர்கள் ஒரு பகுதியில் ஒன்றாக உறங்கிய நிலையில், 23 வயது ரிங்கு குமார் என்ற இளைஞர் தனியாக படுத்து உறங்கி உள்ளார். அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு உறங்கிக் கொண்டு இருந்த ரிங்கு குமாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றார். உடனடியாக விழித்துக் கொண்ட ரிங்கு குமார் கூச்சலிட்டார்.

இதைக் கேட்டு அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர் வருவதற்குள் அந்த அடையாளம் தெரியாத நபர் தான் வைத்து இருந்த கத்தியால் ரிங்கு குமாரை கழுத்தில் மூன்று முறை குத்தி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக ரிங்கு குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற காட்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர். உயிரிழந்த ரிங்கு குமாரின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News