திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறுவதில்லை - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புவதாக கூறினார்.
கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இளைஞர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக கட்சியின் சால்வை அணிவித்து ரோஜா மலர் கொடுத்து வரவேற்று வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, தனித்தலைமையாக எடப்பாடியார் பொதுச் செயலாளராக வந்ததிலிருந்து அதிகப்படியான இளைஞர்களும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருவதாக தெரிவித்தார். தற்பொழுது நீங்கள் எல்லாம் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த அதிமுக கட்சி சிறப்பான கட்சி எனவும் இது ஒரு குடும்பம் போன்றது எனவும் தெரிவித்தார்.
இந்த கட்சியில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும் எனவும் கூறினார். இந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல் இருப்பார்கள் என தெரிவித்த அவர் திமுகவில் அது போன்று இருக்காது என சாடினார். மேலும் எந்த பிரச்சனையானாலும் நாங்கள் உடன் இருப்போம் எனவும் வேலை வாய்ப்பு உட்பட சுக துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவோம் என தெரிவித்தார். தான் அமைச்சராக இருந்த பொழுது கோவை மாவட்டத்தில் மட்டும் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்.
இந்த கட்சியில் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டாம் எனவும் கிடைக்கின்ற நேரத்தில் பணியாற்றலாம் எனவும் தேர்தல் காலங்களில் மட்டும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என இளைஞர்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். உங்களை நாங்கள் எங்கள் குழந்தைகள் போலும் தம்பிகள் போலும் பார்ப்போம் எனவும் கூறினார்.
நீட் தேர்வு பற்றி திமுக ஏமாற்றி வருவதாகவும் ஆனால் எடப்பாடியார் 7.5% இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததை குறிப்பிட்டார். மேலும் கொரோனா காலத்தில் பரிட்சையின் பொழுது அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தாக தெரிவித்த அவர், தற்பொழுது 52 சதவிகிதம் பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால் அதற்கு அம்மாவின்(ஜெயலலிதா) அரசுதான் காரணம் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் எந்த தொழில்களும் நடைபெறுவதில்லை அனைத்திற்கும் விலை உயர்வு தான் என கூறிய அவர், ஒட்டுமொத்த மக்களும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புவதாகவும் அதற்காக நீங்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.