கோவையில் இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
கோவையில் காளப்பட்டி மற்றும் ஆலாந்துறை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.;
ரஞ்சித்குமார்
கடந்த 2022 ம் ஆண்டில் சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), சேலம் செவ்வாய்பேட்டை மரமண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) ஆகியோர் யூ-டியூப்-ஐ பார்த்து, துப்பாக்கி தயாரித்ததும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிமருந்து, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இரண்டு இடங்களில் தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இவரது வீட்டில், தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகன் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். முருகன் வீட்டிற்கு காலை 6.30 மணிக்கு வந்த அதிகாரிகள், 9 மணிக்கு சோதனை நடத்தினர். அப்போது முருகனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் சோதனையை முடித்து அதிகாரிகள் கிளம்பி சென்றனர். விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.