மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
சக்தி ஆனந்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய சக்தி ஆனந்த், ”கடந்த 31 மாதமாக முறையாக நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. சிலர் அளித்த பொய்யான புகார் குறித்து காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். சில யூடுபர்ஸ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். வருகின்ற திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்க உள்ளோம்.
தவறான செய்தி வெளியிடும் யூடுபர்ஸ் வீடுகளை முற்றுகையிடுவோம். விசாரணையில் நல்லவன் என நிரூபிப்பேன். முகாந்திரம் இல்லாமல் மோசடி செய்ததா பேசக்கூடாது. இதனால் 60 இலட்சம் பேர் வாழ்க்கை பாதிக்கப்படும். என் மீதான குற்றம் நிரூபிக்கும் வரை அவதூறு பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என மை வி3 ஏட்ஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 180 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இதனிடையே சக்தி ஆனந்த் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு ஏதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சக்தி ஆனந்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சக்தி ஆனந்தை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.