தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் : அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை
Coimbatore News- தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதைத்தான் பல கருத்து கணிப்புகளும் சொல்லி வருகின்றன என அமைச்சர் முத்துசாமி கூறினார்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரம்பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். அப்போது ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,”முதலமைச்சர் தலைமையில் அரசு செய்துள்ள சாதனைகள் பற்றிய கண்காட்சி, மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் துறை ரீதியான சாதனைகள் புகைப்பட கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி 7 நாட்களுக்கு இருக்கும். இது பேருந்து அதிகமாக வந்து செல்லும் இடம். இங்கு வரும் பொதுமக்கள் கண்காட்சியை பார்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் பெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
கோவை மக்களவை தொகுதியில் திமுகவே போட்டியிடுவது தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். சிலர் தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளனர். அது வேறு. கட்சி தலைமையின் முடிவே இறுதியானது. எதையும் எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
அரசியல் ரீதியாக சரியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து வருகிறார். திமுக கூட்டணி தான் சரியாக இருக்கும் என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதைத்தான் பல கருத்து கணிப்புகளும் சொல்லி வருகின்றன. அண்ணாமலை சொல்வது பற்றி எல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. மக்களுக்காக வேலை செய்து வருகிறோம். பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். எல்லோரும் கருணாநிதி பெயர் சொல்லி தான் வாக்குகளை வாங்குகிறோம். இதில் அவர் புதிதாக என்ன தவறு கண்டுபிடித்து விட்டார் எனத் தெரியவில்லை. இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் கருத்து சொல்வது தேவையற்றது” எனப் பதிலளித்தார்.