பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

தமிழர்களை இழிவு படுத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Update: 2024-05-23 13:45 GMT

பிரதமர் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒரிசாவில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பூரி ஜெகன்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறைகள் பூட்டப்பட்ட சாவி காணவில்லை. அதனை தமிழகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்பது போன்று பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மோடி தமிழர்களை திருடர்கள் என்பது போல பேசி இருப்பதாக கூறினார். ஒரிசா மாநில முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடியவர் பாண்டியன் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மோடியால் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நாளும் மதம், சாதி, மொழி பிரிவினை என்று அனைத்து வகையிலும் பேசி மக்களை கூறு  போடுவதாக தெரிவித்தார். மேலும் வாக்கு ஆதாயத்திற்காக இந்தியா கூட்டணியின் மீது பழி சுமத்தி பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரிசாவை மண்ணின் மைந்தர்கள் தான் ஆள வேண்டும் தமிழன் ஆளக்கூடாது என்பது போல பேசி இருப்பதாக தெரிவித்த இராமகிருட்டிணன் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழில் திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றெல்லாம் கூறி காசி தமிழ் சங்கமம் என்று ரயிலை எல்லாம் விட்டு விட்டு மக்களை ஏமாற்றி தற்பொழுது ஒரிசா மக்களின் வாக்கிற்காகவும் வடநாட்டு மக்களின் வாக்கு வங்கிக்காகவுன் தமிழர்களை திருடர்கள் என்று இழிவு படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு தகுந்தார் போல் பேசி வரக்கூடிய மோடி நிச்சயமாக தோல்வியை சந்திப்பது உறுதி என்று தெரிந்த பின்னால் ஒவ்வொரு நாளும் மன நோயாளி போல பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் பிரதமர் மோடி பெண்களை சக்தி என்று புகழ்ந்து பேசி விட்டு தற்பொழுது வடமாநிலத்திற்கு சென்று மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அளித்தது தவறு என்று பேசி இருப்பதாகவுன் கூறினார். தமிழர்களை இழிவு படுத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News