மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு : அமைச்சர் தா.மோ. அன்பரசன்..!

அதிமுக ஆட்சியாளர்கள், மத்திய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான், மின் கட்டணம் இந்த அளவுக்கு உயர காரணம்

Update: 2024-08-29 09:30 GMT

அமைச்சர் தா.மோ. அன்பரசன்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 46 நபர்களுக்கு 6.54 கோடி மானியம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், கடந்த ஜனவரி மாதம் முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதாகவும், அதில் எம்எஸ்எம்இ துறையில், 5068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். கடந்த எட்டு மாதங்களில் இதுவரை 1645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.

மீதம் இருக்கக்கூடிய தொழில் தொடங்காத வங்கி கடன் பெற்ற தொழில் முனைவோர்களை இங்கு அழைத்து இருப்பதாக கூறினார். அவர்களின் பிரச்சனைகள் கேட்டறிந்து, அதற்கான தீர்வு ஏற்படுவதற்காக அனைத்து துறை அதிகாரிகளையும் இங்கே அழைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 8 மாத காலமாக தொழில் தொடங்காததற்கான காரணம், அதற்கான நடைமுறை சிக்கல்களை களைந்து, அவர்கள் விரைவில் தொழில் தொடங்க ஆவண செய்யப்படும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை 2615 கோடியே 30 லட்சம் வங்கிக் கடன், தொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்றார். 30 ஆயிரத்து 324 தொழில் முனைவோர்களை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு உருவாக்கி, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தமிழக முழுவதும் 16 தொழிற்பேட்டைகள், 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக 115.6 கோடி மதிப்பில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழக முழுவதும் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது என்றார்.

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு என கூறிய அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியாளர்கள், மத்திய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான், மின் கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டதற்கு காரணம் என்றார். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் வங்கிகள் கடன் கொடுக்க உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தாலும் கடன் கொடுக்க மறுப்பது குறித்த கேள்விக்கு, மாவட்ட வாரியாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் குறைகளை கேட்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரிவித்தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Tags:    

Similar News