மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
கொலை குற்றத்திற்காக ஆயுள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.;
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 48 வயதான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்தார். இது தொடர்பாக சூலூர் காவல் துறையினர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஆறுமுகத்திற்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். 32 வயதான இவர் கடந்த 2019-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்தார். இது தொடர்பாக பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சக்திவேல் (32) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்ற நிலையில், இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சக்திவேலுக்கு ஐந்தரை வருட சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்குகளில் சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.