கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான சயன்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயன் விசாரணைக்கு ஆஜரானர்.

Update: 2024-02-01 09:00 GMT

சயன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர்  கைது செய்யப்பட்டனர்.

தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனை சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். கடந்த 11 ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் கேரள மாநிலத்தில் வேறோரு வழக்கில் சயன் ஆஜரானதால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயன் விசாரணைக்கு ஆஜரானர். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், செல்போன் உரையாடல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News