மைவி3ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீண்டும் சிறையில் அடைப்பு
கோவை மைவி3ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் போலீஸ் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.;
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் சக்தி்ஆனந்தன் குறித்து கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மீதும் புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ம் தேதி போராட்டம் நடத்தினார்.
காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இதே போல மற்றுமொரு வழக்கில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து சக்தி ஆனந்தனிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நேற்று பிற்பகல் முதல் இன்று பிற்பகல் வரை விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க 4 வது குற்றவியல் நடுவர் நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.