குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்க ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.;
கோவை மாநகரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் கோவை மாநகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வட மாநிலத்திலிருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணித்த பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதில் சுமார் 50 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்களை கொண்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பிடித்து வைத்துள்ள போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.