கோவையில் நடனமாடியபடியே வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேட்சை

கோவையில் நடனமாடிக் கொண்டும் முருகா, முருகா என்று பாடிக்கொண்டும் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார்.;

Update: 2024-03-26 12:36 GMT

கோவையில் நடனமாடியபடி வேட்பு மனு தாக்கல் செய்ய  வந்த சுயேட்சை வேட்பாளர் துரைசாமி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் நடனமாடிக் கொண்டும் முருகா, முருகா என்று பாடிக்கொண்டும் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடனமாடிக் கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதல் ஆர்வம் இருந்த நிலையில், எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன்.

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளேன். அது சார்ந்த தொழில்கள் மற்றும் பொது மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய இலக்கு. விவசாயம் இல்லையென்றால், நாடே கிடையாது. சிரபுஞ்சியில் இருந்து நீரை நம்முடைய மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறந்த பெண் குழந்தையிலிருந்து மூதாட்டி வரை 5 பவுன் தங்க நகை கொடுக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் கொடுக்கப்படும். நிலம் உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறேன். பவுன் பத்தாயிரம் இருந்தாலும், லட்ச ரூபாய்க்கு விற்றாலும் பூமியிலிருந்து வெட்டி மக்களுக்கு கொடுப்பேன். இங்கிலாந்துகாரன் ரெண்டு டன் தங்கத்தை இந்தியாவில் இருந்து எடுத்துட்டு போயிருக்கிறான். ஆண்கள் உழைத்து வாழ வேண்டும். இளைஞர்கள் பைக்குகளை வேகமாக ஓட்டி விபத்துக்கு உள்ளாகி வருவதால் அவர்களுக்கு எதுவும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News