கோவை அருகே பெய்யும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது

Update: 2024-07-17 07:19 GMT

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் காட்சி.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது‌. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. குறிப்பாக கோவை - பாலக்காடு சாலை அருகே உள்ள சுண்ணாம்புக்கல் காளவாய் தடுப்பணையில் புது வெள்ளம் சீறிப்பாய்வதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தும் செஃல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

ஒரு சிலர் ஆர்வ மிகுதியில் ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் குளிக்கவும் தூண்டில் போட்டு மீன் பிடித்தும் வருகின்றனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் செஃல்பி எடுக்கவும், மீன் பிடிக்கவும், குளிக்கவும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News