காதல் திருமணம் செய்த மனைவி கொடுமைப்படுத்துவதாக கணவர் போலீசில் புகார்
விவாகரத்து பெறாமல் மறைத்துவிட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மனவைி மீது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அசோகாதேவி. இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அசோகாதேவிக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து முறையாக விவாகரத்து பெறாமல் அந்த விஷயத்தையே முழுமையாக மறைத்துவிட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இதனை தான் அறிந்து கொண்ட நாள் முதல் தன்னையும், தனது அம்மா, பாட்டி ஆகியோரை அசோகாதேவி கொடுமைப்படுத்துவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் இது குறித்து ஏதேனும் கேட்டால் வரதட்சணை கொடுமை என காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என மிரட்டுவதாக தாயார் மற்றும் பாட்டியுடன் வந்து புகார் மனு அளித்தார். மேலும் அசோகாதேவிக்கு ஏற்கனவே திருமணமானதை அவரது குடும்பத்தினரும் தன்னிடம் கூறாமல் மறைத்து விட்டதாகவும், அந்த குடும்பத்தினரும் தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்ட அவர் அசோகாதேவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அசோகாதேவியின் கொடுமையை தாங்க முடியாமல் சில தினங்களாகவே தானும் தனது அம்மா மற்றும் பாட்டி நாங்கள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாகவும், இதனால் சரிவர உணவு, மருந்து எதுவும் எடுத்து கொள்ள முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தார்.